அன்புள்ள அம்மாவுக்கு
தான் வளர்த்த ரோஜாச்செடி மலர்கொடுத்த பின்பே
அதை ரசிக்க தொடங்கும் மானுடம் மத்தியில்,
கருவில் உருவம் கொடுத்தபடியே என்னை
நேசித்தவளே,
ஜென்மம் முழுவதும் நான் தேடிய உறவுகளை
அடகு வைத்தாலும் உந்தன் நேசத்தை வெல்ல முடியுமா ! anbulla ammavukku amma kavithai
பாதை பாராமல் நான் நடந்து காலில் முள் தீண்டி முறிந்தபோது,
கால்களை சுத்தம் செய்ய நீர் தேடாமல்,
என் வ(ழி)லியை நீடிக்க செய்ய மனமில்லாமல்,
உன் எச்சில் தொட்டு சுத்தம் செய்து முள் களைவாயே !
உன்னை பார்த்த பின்புதான்,
“கடவுள் தாய்மை பொறுப்பை பெண்மைக்கு
தாரைவார்த்ததன் அர்த்தம் புரிந்தது”.
தினம் தினம் அழவைத்து சிரிக்க வைக்கும் காதலை விட,
அழாமல் பார்த்துக்கொள்ளத் துடிக்கும் உன் தாய்மைக்கு
உன்னதம் அதிகம்.
மறக்கப்படும், மறுக்கப்படும் உறவுகள் மத்தியில்
மறக்கத்தெரியாத ஒரே ஜீவன் அம்மா !.
நான் பிறக்கும்போதும் அழவைத்தேன், உனக்கு முன் நான் என்றால்,
நான் இறக்கும் போதும் அழவைப்பேன்.
இடையில் இந்த ஜென்மம் முழுதும் உன்னை மகளாய் தாங்கும்
பாக்கியம் கொடுத்த இறைவனுக்கு நன்றி.